திரங்கானு மாநிலம், உலு பெசுட் பகுதியில் உள்ள லா ஹாட் ஸ்பிரிங் சுற்றுலா பொழுதுபோக்கு மையத்திற்கு அருகிலுள்ள காட்டில், மூலிகை வேர்களைத் தேடிச் சென்ற தந்தையும் மகனும் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகின்றது.
காணாமல் போனவர்கள் கெடா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான அடாம் அட்னான் மற்றும் 57 வயதான அவரது தந்தை அட்னான் முஹமட் என பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ரொஸாய்மி அப் ரஹிம் தெரிவித்துள்ளார்.
இருவரும் அங்குள்ள கம்போங் பாடாங் லண்டாக் பகுதியில் உள்ள டேசா லாண்டாக் தங்கும் விடுதியில் தங்கியிருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் அவர்கள் காட்டுக்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் அவர்களில் ஒருவர் குடும்ப உறுப்பினர் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காட்டுக்குள் வழிதவறிவிட்டதாகவும் வெளியே செல்லும் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், அவர்களின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய குடிமைத் தற்காப்புப் படை மற்றும் உள்ளூர் கிராம மக்கள் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.








