கோலாலம்பூர், புடு பகுதியில் உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் இன்று அதிகாலை குடிநுழைவுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 190 வெளிநாட்டினர் மற்றும் இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்களின் அமைதிக்கும் ஒழுங்குக்கும் இடையூறு ஏற்படுவதாகக் கிடைத்த புகார்களைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இது குறித்து குடிநுழைவுத் துறையின் அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் பஸ்ரி ஒத்மான் கூறுகையில், சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு மையமானது, மசூதிக்கு அருகில் செயல்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு வாடிக்கையாளர்களை உபசரிப்பதற்காக பல அறைகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், ஒவ்வொரு அறையிலும் 50 முதல் 60 பேர் வரை நெருக்கமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 41 வயதுக்குட்பட்ட 99 ஆண்களும் 91 பெண்களும் அடங்குவர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் ஆவணச் சரிபார்ப்பு மற்றும் விசாரணைக்காக குடிநுழைவுத் துறையின் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








