டிரெய்லர் லோரியும் காரும் மோதிக் கொண்ட சாலை விபத்தில் காரில் பயணம் செய்த இரு நண்பர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் ஜோகூர், தங்காக் – சிகமாட் சாலையின் 39.9 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
புரோடுவா மைவி ரக காரில் தங்காக்கிலிருந்து சிகமாட்டை நோக்கி பயணம் செய்த இரு நண்பர்களில் காரை செலுத்தியவர், கண் அயர்ந்து இருக்கலாம் என்று சந்தேகிகப்படும் நிலையில் அவர்களின் கார், சாலையைவிட்டு விலகி எதிரே வந்த டிரெய்லர் லோரியில் மோதியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதில் லாபிஸ், கம்போங் பாயா மெரா மற்றும் தாமான் வாவாசான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இரு நண்பர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்லான் முகமது தாலிப் தெரிவித்தார்.








