ஈப்போ, டிசம்பர்.06-
பேரா, செம்மோர், தானா ஹீத்தாம், புக்கிட் பலாக்கோங் காட்டுப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாகப் புகார் பெறப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியை நெருங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்பகுதியில் புலியினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்ற நம்பப்படும் இரு மாடுகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் 5 மாடுகள் காணாதது குறித்து கால்நடை வளர்ப்பாளர்களிடமிருந்து தாங்கள் புகார் பெற்று இருப்பதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசான் நோர்டின் தெரிவித்தார்.
போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காட்டுப் பகுதியில் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா அதிகாரிகளுடன் போலீசார் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








