Jun 29, 2026
Thisaigal NewsYouTube
 200 ரிங்கிட் திருட்டிற்கு ஓராண்டு சிறையா? தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு
தற்போதைய செய்திகள்

200 ரிங்கிட் திருட்டிற்கு ஓராண்டு சிறையா? தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு

Share:

கடந்த வாரம் பள்ளிவாசல் ஒன்றின் உண்டியலைத் திருடிய வழக்கில் கைதான மூன்று இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட ஆறு மாதச் சிறைத்தண்டனை மற்றும் 4,000 ரிங்கிட் அபராதம் மிகவும் அதிகப்படியானது என அவர்களது வழக்கறிஞர் இன்று வாதிட்டுள்ளார்.

கார் கழுவும் நிலையத்தில் பணிபுரிந்த 26 வயது கே. தினேஸ்வரன் , லாரி உதவியாளர் 22 வயது ஆர். நிஷன்ராஜ் மற்றும் தொழிற்சாலை ஊழியர் 27 வயது ஆர். கணேஷ் ஆகிய மூவருக்கு ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஷ்ருல் ஹைக்கல் மூவரும் புரிந்துள்ள இந்தக் குற்றம், அவர்களின் முதல் குற்றம் என்பதால் இந்தத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறி, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரினார்.

அந்த உண்டியல் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்றும், அதில் இருந்த தொகை 200 ரிங்கிட்டிற்கும் குறைவானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், அரசு தரப்பு வழக்கறிஞர் முவாஸ் கவாரிஸ்மி அஸ்பார், தண்டனையை நிறுத்திவைக்க வலுவான காரணங்கள் ஏதுமில்லை எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் முகம்மது ஷஃபிக் சுலைமான் , இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான எந்தவொரு சிறப்பான அல்லது விதிவிலக்கான சூழலும் இல்லை எனக் கூறி, அந்த மனுவை நிராகரித்தார்.

Related News