கிளந்தான் , லாடாங் கெரில்லாவில் குடியிருக்கும் சுமார் 115 தோட்டப்புற தொழிலாளர்களின் குடும்பங்கள் அவ்விடத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க நிலம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக தமது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களை சந்தித்து இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படவிருப்பதாக ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
கடந்த 1910 ஆம் ஆண்டு தோட்டத்து தொழிலாளியாக பணிபுரிய இந்தியாவிலிருந்து Kerilla தோட்டத்துக்கு பெரும்பான்மை இந்தியர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு 50 வயது வந்தடையும் பொழுது ஓய்வூதியம் பெற்று அந்த தோட்டப்புறத்திலிருந்து வெளியேறி மற்ற இடங்களுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அதில் சிலர் குடியிருக்க வசதியில்லாமல் Kuala Lumpur மற்றும் மற்ற நகரங்களை நோக்கி சென்றதாகவும் இன்னும் சிலர் உறவினர்கள் அல்லது வாடகை வீட்டில் தங்களின் இறுதி காலத்தை கழித்தனர்.

ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த தோட்டம், ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்து தலைமுறையினர்களுக்கு வாழ்வாதார இடமாக அமைந்ததாக துணையமைச்சர் சரஸ்வதி தெரிவித்தார்.
அவ்விடத்தில் போதுமான வசதியின்றி தங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக சில குடும்பங்கள் அத்தோட்டத்திலிருந்து வெளியேறி மற்ற இடங்களில் குடிபெயர்ந்தனர்.
அவ்விடத்தை விட்டு சில குடும்பங்கள் வெளியேறிய போதும் கெரில்லா தோட்டத்து கோவிலில் நேற்று நடைபெற்ற 108 ஆவது ஆண்டு வருடாந்திர திருவிழாவில் 5, 000 பேர் திளைத்திருந்ததாக சரஸ்வதி தகவலை வெளியிட்டார்.
மேலும், அந்த கோயில் நீண்டக்காலமாக பழுதுபார்க்காமல் இருப்பதாகவும் இன்னும் பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அந்நிர்வாகம் நிதி கோரி விண்ணப்பம் செய்திருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, அக்கோயிலை மலேசியர்கள் அனைவருக்கும் ஒரு திருத்தலமாக அங்கீகரிக்க இந்து சங்கத்திடம் கோரிக்கையிட இருப்பதாக சரஸ்வதி கந்தசாமி மேலும் தெரிவித்தார்.
இந்த நில விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடமிருந்து போதுமான ஆதாரங்களும் ஆவணங்களும் கிடைத்தப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நேற்று நடைபெற்ற Kerilla தோட்டத்து கோயிலின் 108 ஆவது ஆண்டு திருவிழா மற்றும் ஒற்றுமை நிகழ்ச்சியான "Semarak Perpaduan" - னை தொடக்கி வைத்து பேசுகையில் துணையமைச்சர் சரஸ்வதி இதைக் கூறினார்.








