மலேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் கீழ் கடந்த ஜூன் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட, வேலை நேரத்தில் அல்லாத விபத்துகளுக்கான காப்பீட்டுத் திட்டமான லிண்டுங் 24 ஜாம்மின் பங்களிப்பு விகிதம் உலகிலேயே மிகக் குறைவானது என்று அதன் குழும முதன்மைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் சம்பளத்தில் 0.75 விழுக்காடு மட்டுமே பங்களிப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இத்திட்டம், சந்தாதாரர்களுக்குப் சுமையை ஏற்படுத்துவதற்காகக் கொண்டுவரப்படவில்லை என்றும், இதில் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்தத் திட்டத்தைக் கட்டாயமாக்காமல், உடனடியாகத் தொண்டூழிய அடிப்படையிலோ அல்லது விருப்பத்தின் பேரிலோ செயல்படுத்துவதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடர்பாகப் பெறப்பட்ட கருத்துக்களைப் பிரதமர் முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், இதுவரை 207,000 முதலாளிகள், 1.92 மில்லியன் உள்ளூர் ஊழியர்கள் மற்றும் 307,000 வெளிநாட்டு ஊழியர்கள் பங்களிப்பு செய்துள்ளதோடு, ஒட்டுமொத்தமாகத் திரண்ட தொகை கிட்டத்தட்ட RM58 மில்லியனை எட்டியுள்ளது.








