நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகளை உருவாக்க குடிநுழைவுத் துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நாடு தழுவிய அளவில் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தவும், சோதனைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்தின் அமலாக்கப் பிரிவிலும் ஏற்கனவே பயிற்சி பெற்ற ட்ரோன் இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் குடிநுழைவுத் துறையின் சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளில் இந்த ட்ரோன் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிகாரிகள் சோதனைகளின் போது வான்வழியாகக் கண்காணிக்கவும், காயங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், தப்பியோட முயலும் சந்தேக நபர்களைக் கண்டறியவும் இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது.
மேலும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இதனுடன் இணைத்து, இலக்கு வைக்கப்படும் பகுதிகளை வரைபடமாக்கும் மேம்பட்ட வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சோதனைகளின் போது இலக்குகளைத் துல்லியமாகக் கண்காணிக்க உதவுவதால், கைது நடவடிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக டத்தோ ஜக்காரியா ஷாபான் குறிப்பிட்டுள்ளார்.








