ஆறாம் படிவ மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க, 2027ஆம் ஆண்டுக்கான தேசிய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
பட்டப்படிப்புக்கு முந்தைய மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, ஆறாம் படிவ மாணவர்களுக்கு தற்போது எந்த உதவித்தொகையும் வழங்கப்படுவதில்லை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அக்டோபரில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதற்கான ஒதுக்கீடும் உதவித்தொகையும் அறிவிக்கப்படும் என்றார். இருப்பினும், வழங்கப்படும் தொகை அரசாங்கத்தின் நிதி நிலவரத்தைப் பொறுத்து பின்னர் நிர்ணயிக்கப்படும்.
ஏழை குடும்பங்கள், கிராமப்புறங்கள், தோட்டப்பகுதிகள் மற்றும் நகர்ப்புற ஏழை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அன்வார் தெரிவித்தார்.
கல்விக்கே மதானி அரசாங்கத்தின் பட்ஜெட்டில் மிகப்பெரிய ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.








