மலேசியாவை 2030-ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு நாடாக உருவாக்கும் இலக்கை அடைய, அரசுத் துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான தெளிவான கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் வகுத்து வருவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், மக்களுக்கு வழங்கப்படும் அரசுச் சேவைகளை மேம்படுத்தவும் அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புத்ராஜெயாவில் பணியாற்றும் இந்திய அரசு ஊழியர்களின் சங்கமான இமயம், தனது உறுப்பினர்களுக்காக இலக்கவியல் அமைச்சு, மைடிஜிட்டல் மற்றும் ஆசியா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 2026 ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் தலைமைத்துவத்துத்திற்கான இரண்டு நாள் பயிற்சியை கோலாலம்பூர் ஆசியா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பள்ளியில் நடத்துகிறது.
இன்று தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவப் பயிற்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோபிந்த் சிங் இதனைத் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் இந்திய சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர்களின் பிரதான அமைப்பான இமயத்தின் தலைவரும், புத்ராஜெயா மருத்துவமனையின் மூத்த மருத்துவருமான டாக்டர் சதிஷ்குமார் கே. முத்துசாமி கூறுகையில், பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் இந்திய ஊழியர்களின் செயற்கை நுண்ணறிவுத் திறனை மேம்படுத்தும் இப்பயிற்சியில் 60 பேர் பங்கேற்றுள்ளனர். இரண்டு நாள் பயிற்சியில், தங்கள் பணியிடங்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு செயலியை உருவாக்குவதும் இலக்காகும் என்றார்.
அரச மலேசியப் போலீஸ்படை, கணக்கவியத்துறை, மருத்துவத்துறை, சுங்கத்துறை, குடிநுழைவுத்துறை, பொருளாதார துறை, பொதுச் சேவைத்துறை, கல்வித்துறை, இலக்கவியல் துறை ஆகிய துறைகளில் அரசு பணியாளர்களாக சேவையாற்றி வரும் யர்களுக்கு பிரத்தியேகமாக இந்த செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகிறது.








