கோலாலம்பூர் ஜாலான் அம்பாங் பகுதியில் உள்ள இரவு விடுதியில் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில், வாடிக்கையாளர்களுக்கு உபசரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 47 தாய்லாந்துப் பெண்கள் உட்பட 68 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது, பாதுகாவலர்களுடன் அதிகாரிகளுக்குச் சிறிது நேரம் மோதல் ஏற்பட்டது.
மொத்தம் 113 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்ய்ஹோ ஹம்ஷா இன்ஜாவ் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 47 தாய்லாந்துப் பெண்கள், 7 தாய்லாந்து ஆண்கள், 14 வங்காளதேச ஆண்கள் அடங்குவர். அந்தப் பெண்கள், வாடிக்கையாளர்களை உபசரிப்பதன் மூலம் ஓர் இரவுக்கு 3,000 ரிங்கிட் வரை கமிஷன் பெற்றதாகவும் அவர் கூறினார்.
சமூக வருகை விசா அனுமதிச் சீட்டில் மலேசியா வந்தவர்கள் விதிமுறைகளை மீறி வேலை செய்ததுடன், கட்டுமானம் மற்றும் துப்புரவுப் பணிகளுக்கான அனுமதிச் சீட்டுகளைப் பெற்ற வெளிநாட்டினரும் இரவு விடுதியில் பணியாற்றியது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட 20 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்கு உதவ 5 உள்ளூர் மக்களுக்குச் சாட்சியமளிப்பதற்கான அழைப்பாணைகளும் வழங்கப்பட்டன.








