மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையினின் பதவி நிலை குறித்து, பொதுச் சேவைத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளரும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரும் அரசுப் பணித்துறை விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். இன்று ஜோகூர், கூலாய், கம்போங் மலாயு செடெனாக்கில் நடைபெற்ற தேசியப் பதிவுத் துறையின் 78ஆவது தேசியப் பதிவாளர் தின நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாம் முனையத்தில் இரு போலீஸ்காரர்களைத் தாக்கியதாக முஹமட் ஷுஹைலி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








