கெடா மாநில காவல்துறையினர் மேற்கொண்ட ஓப் பிந்தாஸ் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத குடியேறிகளை கடத்தும் 5 ஆள் கடத்தும் கும்பல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளர்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வரையில் கெடா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்ட ஓப் பிந்தாஸ் நடவடிக்கையில் ஆள் கடத்தல் கும்பல்களைச் 9 உள்ளூர் ஆடவர்களும், அந்த கும்பல்களின் உறுப்பினர்களான 3 மியன்மார் ஆடவர்களும், அவர்களுடன் கடல் வழியாக மலேசிய எல்லைக்குள் கடத்தி வரப்பட்ட 47 மியான்மார் பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில தலைமை காவல்துறை அதிகாரி டத்தோ பிசோல் சாலே தெரிவித்துள்ளார்.
மியன்மார் தலைநகர் யாங்கூனில் செயல்பட்டு வரும் ஆள் கடத்தல் ஏஜெண்டுகள் மூலம் கடல் மற்றும் தரை மார்க்கமாக அந்த 47 பேரும் இந்நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டத்தோ பிசோல் குறிப்பிட்டார்.
மியன்மாரிலிருந்து கடத்தி வரப்படும் ஒவ்வொரு பிரஜையிடமிருந்து இந்த ஆள் கடத்தல் கும்பல்கள் 5 ஆயிரம் வெள்ளி முதல் 7 ஆயிரம் வெள்ளி வரையில் வசூல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கும்பல்கள் லங்காவியை Transit மையமாக பயன்படுத்தி இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளன. 15 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 47 பேரும் லங்காவி மற்றும் குபாங் பாசு வாயிலாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டுள்ளனர் என்று டத்தோ பிசோல் மேலும் கூறினார்.








