வட இந்தியாவில் அயோத்யா நகருக்கு சென்ற மலேசிய சுற்றுப் பயணி ஒருவர் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை உள்ளடக்கிய மலேசிய சுற்றுலாக்குழுவினருடன் இணைந்து இருந்த 73 வயது மலேசியப் பிரஜை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹோட்டல் அறையில் இறந்து கிடந்ததாக இந்திய செய்தி நிறுவனம் செய்தி வெளிட்டுள்ளது.
தர்மராஜா RP சண்முகம் என்பவரே உயிரிழந்த மலேசியப் பிரஜையாவார் என்று அடையாளம் கூறப்பட்டது.
16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபார் மசூதி வீற்றிருந்த இடத்திற்கு அருகில் கட்டப்பட்ட வரும் மிகப்பெரிய இராமர் கோயில் கட்டுமான தளத்தின் பக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மலேசிய சுற்றலாக்குழுவினருடன் தர்மராஜா தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
உடன் வந்த நான்கு பெண்களும், இரு ஆண்களும் வெளியே சென்று விட்டு, தர்மராஜா தங்கியிருந்த அறைக்கதவை தட்டிய போது திறக்கப்படவில்லை. பின்னர் ஹோட்டல் பணியாளரின் உதவியுடன் மாற்றுச்சாவியை பயன்படுத்தி அறைக்கதவு திறக்கப்பட்டது.
ஆனால் தர்மராஜா சுயநினைவு இழந்த நிலையில் அசைவற்று கிடந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொலைக்காட்சி பெட்டி செயலில் இருந்ததாக கூறப்படுகிறது. மரணத்திற்காக காரணம் உடனடியாக தெரியவில்லை என்ற இந்திய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.








