வாகனத் துறை மற்றும் தொழில்துறைகளில் வங்காள தேசத்துடன் கூட்டாண்மை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை மலேசியா ஆராய்ந்து வருகின்றது.
வங்காள தேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாமா ஒபயேத் இஸ்லாம் நேற்று செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்த அந்நாட்டிற்கான மலேசிய தூதர் முகமது ஷுஹாதா ஒஸ்மான், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்துறை உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் பற்றி கலந்துரையாடினார்.
தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு தொடர்பான வாய்ப்புகளை வலியுறுத்திய முகமது ஷுஹாதா, இதன் மூலமாக இளம் வங்காள தேச தொழில்முனைவோர்களுக்கு பயிற்சி வழங்கும் வாய்ப்புகளையும் உருவாக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும், மலேசியாவிலுள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் வங்காள தேசத்தில், வாகனங்களின் உற்பத்தி பாகங்களை ஒன்றிணைக்கும் வாய்ப்புகளை ஆய்வு செய்யலாம் என்றும் முகமது ஷுஹாதா குறிப்பிட்டார்.
அதேவேளையில், இருநாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வங்காள தேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான், மலேசியாவிற்கு வருகை புரிய அழைப்பு விடுக்க, மலேசிய அரசாங்கம் தயாராகி வருவதாகவும் முகமது ஷுஹாதா தெரிவித்தார்.
இதனிடையே, ஆசியான் அமைப்பில் துறை சார் உரையாடல் உறுப்பினராக வங்கதேசம் இணைய, மலேசியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ஷாமா ஒபயேத் இஸ்லாம் கேட்டுக் கொண்டார்.
அதேவேளையில், தற்போது 10 ஆயிரத்திற்கும் அதிகமான வங்காள தேச மாணவர்கள் மலேசியாவில் கல்வி கற்று வரும் நிலையில், அவர்களுக்கு பல நுழைவு விசா வழங்க மலேசியா எடுத்துள்ள தீர்மானத்தை ஷாமா ஒபயேத் இஸ்லாம் வரவேற்று தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.








