பினாங்கு மாநில ஆளுநர், துன் டத்தோ ஸ்ரீ உத்தமா ஹாஜி ராம்லி நாவ் தாலிப் பிறந்த நாளையொட்டி கடந்த ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்ற விருதளிப்பு சடங்கில் தொழில் அதிபரும், சமூக நல சேவையாளருமான சந்திரகாந்தம் குப்பனாருக்கு டி.எஸ்.பி.என். எனப்படும் டர்ஜா செத்தியா பாங்குவான் நெகிரி அந்தஸ்தை தாங்கிய டத்தோ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர், பூச்சோங் சீபீல்டு தோட்டத்தில் பிறந்து, கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதையைக் கடந்து வந்த சந்திரகாந்தம், ஒரு சாதாரண இரும்புக்கடையில் 12 ஆண்டுகள் தொழிலைக் கற்று, இன்று நாடளாவிய நிலையில் 'ஸ்கிராப் மெட்டல்' துறையில் அசுர வளர்ச்சி கண்டு இந்திய சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
எளிமையும் தன்னடக்கமும் கொண்ட டத்தோ சந்திரகாந்தம், "நான் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவன்" என்பதைப் பெருமையோடு கூறிக்கொண்டு, ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கும், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பிரதிபலன் பாராது லட்சக்கணக்கான ரிங்கிட் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகிறார்.
"வெற்றி என்பது பணபலத்தில் இல்லை; சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதில்தான் உள்ளது" என்ற தத்துவத்திற்கு ஏற்ப வாழும் டத்தோ சந்திரகாந்தமின் சமூக நல்லிணக்கச் சேவையைப் பாராட்டி பினாங்கு அரசாங்கம் இந்த உயரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.








