Jul 14, 2026
Thisaigal NewsYouTube
சித்தியவான் துப்பாக்கி மற்றும் 6,158 தோட்டாக்கள் விவகாரம்: வேலை இல்லாத வாலிபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!
தற்போதைய செய்திகள்

சித்தியவான் துப்பாக்கி மற்றும் 6,158 தோட்டாக்கள் விவகாரம்: வேலை இல்லாத வாலிபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

Share:

பேராக் - சித்தியவான் பகுதியில், சட்டவிரோதமாகப் பெருமளவிலான துப்பாக்கிகள் மற்றும் 6,158 தோட்டாக்களை கைவசம் வைத்திருந்த 30 வயது லிங் பூன் சூ என்ற வேலை இல்லாத ஆடவர் மீது செரி மஞ்சோங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மூன்று குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன. எனினும், நீதிபதி அஜிஸா அகமது முன்னிலையில் வாசிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து, விசாரணை கோரியுள்ளார்.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி இரவு 10:00 மணி அளவில், சித்தியவான், கம்பங் சினாவில் உள்ள ஒரு மரக் குடிலில் 9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கி மற்றும் ஐந்து காற்றுத் துப்பாக்கிகளை உரிமமின்றி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் கடுமையான குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் நூர் சாமிலா ஜலாலுதீன், இது பிணையில் வெளிவர முடியாத கடுமையான குற்றம் என்று வாதிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்துவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கைது செய்யப்பட்ட இந்த ஆடவர், தமக்கு ஆயுதங்களைச் சேகரிப்பதில் உள்ள பிரத்யேக ஆர்வம் காரணமாகவே இவற்றைச் சேமித்து வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News