கடந்த 18 மாதங்களில் மூவார் தொகுதி மக்களுக்கு 6.2 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக தனது பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றிய படி, மூவார் மக்களுக்காக பல்வேறு உதவித் திட்டங்களை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது நாடாளுமன்றப் பதிவுகளில் 100 சதவீத வருகைப் பதிவைத் தக்க வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து குழுக் கூட்டங்களிலும், அரசியலமைப்புத் திருத்தங்களிலும் பங்கேற்றுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
வணிக முயற்சிகளிலும், பொழுதுபோக்கு துறையிலும் ஈடுபட்டு வருவதால், அரசியல்வாதியாக அவரது மதிப்பு குறைந்துவிட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், புத்ராஜெயாவில் நீதிமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் சையத் சாதிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், கடந்த ஆறு ஆண்டுகால அரசியல் பயணத்தில், பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்ததாகவும், உயர்நீதிமன்றம் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து மூடா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதும் அவற்றில் ஒன்றாகும் என்றும் சையத் சாதிக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தை எதிர்நோக்கியிருந்த சையத் சாதிக்ன் விடுதலை தொடர்பான அப்பீல் நீதிமன்ற தீர்ப்பை, கூட்டரசு நீதிமன்றம் நேற்று உறுதி செய்து, அவரை வழக்கிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.








