பெட்டாலிங் ஜெயா, மே 06-
இந்து மதத்தை இழிவுப்படுத்தியாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர்களான ஜம்ரி வினோத் காளிமுத்து மற்றும் ஃபிர்தௌஸ் வோங் ஆகிய இருவருக்கு எதிராக அரசாங்கத் தரப்பில் வழக்கு தொடுப்பதற்கு சட்டத்துறை தலைவரை கட்டாயப்படுத்துவதற்கு ஓர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி, இருவர் தொடுத்து வழக்கு மனுவை புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அந்த இரண்டு சமயப் போதகர்கள் மீதும் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்துறை தலைவரை வற்புறுத்துவதற்கு அனுமதி கோரியிருக்கும் S. சிவகுமார் மற்றும் M. ராஜசேகரன் ஆகிய இருவரும் தங்களின் மேல்முறையீட்டில் சட்டத் தேவைகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டனர் என்று காரணம் கூறி, மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஹர்மிந்தர் சிங் தலிவால் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
S. சிவகுமார் மற்றும் M. ராஜசேகரன் ஆகியோரின் இவ் வழக்கு மனுவை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்த போதிலும், வழக்கு செலவுத் தொகை தொடர்பில் அவர்களுக்கு எதிராக எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.
இந்து சமயத்தை தொடர்ந்து இழிவுப்படுத்தி வரும் இஸ்லாமிய சமயப் போதகர்களான ஜம்ரி வினோத் காளிமுத்து மற்றும் ஃபிர்தௌஸ் வோங் ஆகியோருக்கு எதிராக பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டும், அவ்விருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்துறை தலைவர் மறுத்து வருகிறார் என்று சிவகுமாரும், ராஜசேகரனும் தங்கள் வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்விருவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசு சாரா அமைப்பு ஒன்று நீதிமன்ற நடவடிக்கை எடுத்த போதிலும் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்று சட்டத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளதாக போலீஸ் துறை அறிவித்துள்ளது என்று அவர்கள் தங்கள் வழக்கு மனுவில் வாதிட்டனர்.
சட்டத்துறை தலைவரை நிர்பந்திக்கும் சிவகுமார் மற்றும் ராஜசேகரனின் வழக்கு மனு, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு, மேல்முறையீட்டில் அத்தீர்ப்பை அப்பீல் நீதிமன்றம் நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து அவ்விரு சமூக ஆர்வலகர்களும் அந்த தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்மறையீட்டு வழக்கு விசாரணையில் சிவகுமார் மற்றும் ராஜசேகரன் சார்பில் வழக்கறிஞர் டி. குணசீலன் ஆஜராகிய வேளையில் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஹ்மத் ஹனிர் ஹம்பலி ஆஜராகினார்.








