மலாக்கா மாநில அரசிலிருந்து ஜசெக கட்சி திடீரென வெளியேறியதால், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்பிய பேச்சுவார்த்தைக்கான கதவுகள் முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டதாக மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ தெரிவித்துள்ளார்.
நியமன சட்டமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கும் மாநில சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜசெக இந்த அதிரடி முடிவை எடுத்தது. பேச்சுவார்த்தைக்கு அவகாசம் தராமல் ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை உடனடியாகச் சமர்ப்பித்ததே இதற்குக் காரணம் என முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், மலாக்காவில் பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க மலாக்கா பக்காத்தான் ஹரப்பான் நாளை அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறது. இருப்பினும், மக்கள் நலன் மற்றும் மாநில வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் ஜசெகவுடன் தொடர்ந்து கலந்துரையாடத் தயாராக இருப்பதாகவும், இரு தரப்பும் அரசியல் எதிரிகளாக மாற வேண்டியதில்லை என்றும் முதல்வர் அப்துல் ரவுஃப் யூசோ குறிப்பிட்டுள்ளார்.








