உரிமம் இன்றி நிதி மேலாண்மை செய்தல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட 12 குற்றச்சாட்டுகளுக்காகத் தனியார் நிறுவன முன்னாள் இயக்குநர் முகமது ஃபத்லி ஜமாலுதீன்க்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கியாபுத்தன் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான முகமது ஃபத்லிக்கு எதிராக அரசுத் தரப்பு முன்வைத்த வழக்கில் நியாயமான சந்தேகத்தை எழுப்ப அவர் தவறியதைத் தொடர்ந்து, நீதிபதி ஹமிதா முகமது டெரில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், இந்தத் தண்டனைகளை அவர் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஆகஸ்ட் முதல் 2020 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் கோலாலம்பூர் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த மோசடி வழக்கில், ஒட்டுமொத்தமாக 1.263 மில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்த 6 பாதிக்கப்பட்டவர்கள் உட்பட மொத்தம் 23 சாட்சிகள் அரசுத் தரப்பில் விசாரணை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








