புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல்.05-
பினாங்கு, பட்டர்வொர்த் அருகே உள்ள சுங்கை லோக்கான் பகுதியில் ஓப் திரிஸ் 3.0 நடவடிக்கையின் கீழ், சுமார் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான மானிய டீசலைச் சட்டத்திற்குப் புறம்பாகக் கடத்த முயன்ற கும்பலை உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு கைது செய்துள்ளது. பல்வேறு எரிபொருள் நிலையங்களில் இருந்து சிறிய லாரிகள் மூலம் டீசலைச் சேகரித்து, பின்னர் நடமாடும் சேமிப்புக் கிடங்காகச் செயல்படும் பெரிய லாரிகளுக்கு மாற்றி, பினாங்கு மாநிலத்திற்கு வெளியே அதிக ஆதாயத்திற்கு விற்பனை செய்யும் உத்தியை இக்கும்பல் கையாண்டு வந்துள்ளதாக அமைச்சின் பினாங்கு மாநில இயக்குநர் எஸ். ஜெகன் தெரிவித்தார்.
முறையான உரிமம் இன்றி சுமார் 21 ஆயிரத்து 190 லிட்டர் டீசலை வைத்திருந்த குற்றத்திற்காக 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இந்திய நாட்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகளும் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.








