பண்டார் சன்வே, மே 08-
மலேசியாவில் முன்னணி கலைஞர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர். சுரேஷ் காலமானார். அவருக்கு வயது 66. சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சுரேஷ், நேற்று செவ்வாய்க்கிழமை, பண்டார் சன்வேயில் உள்ள அவரின் இல்லத்தில் இறுதி மூச்சை விட்டார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மலேசிய கலைத்துறையில் குறிப்பாக, மேடை நிகழ்ச்சிகளில் எம்.ஜி.ஆர். போன்று வேடமேற்று, அவரின் கொள்கைப்பாடல்கள் முதல் காதல் பாடல்களை வரை பாவனை செய்து வந்த சுரேந்திரன் நாயர் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஜி.ஆர். சுரேஷிற்கு பிரேமானந்தி என்ற மனைவியும் மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

எம்.ஜி. சுரேஷ் மறைவு செய்தி கேட்டு, பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வேயில் உள்ள அவரின் இல்லத்திற்கு விரைந்த உள்ளூர் கலைஞர்கள், அவரின் உடலுக்கு மலர் மாலை சாற்றி, இறுதி மரியாதை செலுத்தியதுடன் அவரின் குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.
மலேசிய தமிழ் கலைத்துறையில் 80 ஆம் ஆண்டுளில் எம்.ஜி.ஆர். தங்கராஜுவின் வரவிற்கு பிறகு எம்.ஜி.ஆர். போன்று வேடம் தரித்து, அவரைப் போன்ற மேடை கலைநிகழ்ச்சிகளில் பாவனை செய்து வந்த முக்கிய கலைஞர்களில் எம்.ஜி.ஆர். சுரேஷ் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

எம்.ஜி.ஆர். ரைப்போன்று தோற்றம் தர வேண்டும் என்பதற்காக முக ஒப்பனையில் அதிக சிரத்தை எடுத்துக்கொண்ட கலைஞர்களில், எம்.ஜி.ஆர். சுரேஷ் தனித்துவமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர். காதல் பாடல்களில் தனிக்கவனம் செலுத்திய பெருமையும் இவரையே சாரும்.
நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் தோன்றி, மலேசிய கலைத்துறைக்கு நிறைவான பங்களிப்பை வழங்கியவரான எம்.ஜி.ஆர். சுரேஸின் நல்லுடக்க சடங்கு நாளை மே 9 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பண்டார் சன்வேயில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெறும். நல்லுடல் பெட்டாலிங் ஜெயா கம்போங் துங்க்கு மின்சுடலையில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








