சிரம்பான், தாமான் துவாங்கு ஜப்பாரில் கருணைக்கடலாய் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, இன்று சனிக்கிழமை பக்திப் பரவசத்துடனும் ஆன்மீகப் பேரெழுச்சியுடனும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. எம்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யவும், தங்களின் பிரார்த்தனைகளைச் செலுத்தவும் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி கோஷங்களுடன் இவ்விழா களைகட்டியுள்ளது.
இன்று காலை 7.31 மணி அளவில், ஜாலான் துவாங்கு அம்புவான் நஜிஹாவில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பால்குட ஊர்வலம் பக்திப் பரவசத்துடன் புறப்பட்டது. மேளதாளங்கள் அதிர, நாதஸ்வர இசை நெஞ்சை உருக்க, ‘அரோகரா! சிவாய நமஹ!’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைத் தொட்டன. சுமார் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்களின் தூய்மையான பக்தியைக் காணிக்கையாக்கி, தலைகளில் பால்குடங்களை ஏந்தியவாறு பக்திப் பெருக்கோடு ஊர்வலமாக நடந்து வந்த காட்சி காண்போரைக் சிலிர்க்க வைத்தது.
பக்தர்களின் பக்தி வெள்ளத்தோடு இந்த ஊர்வலம் காலை 9.00 மணிக்கு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தை வந்தடைந்தது. அந்தப் புண்ணிய வேளையில், ஆலயத்தின் மேலே விஷ்ணுவின் வாகனமான 'மகா கருடன்' வட்டமிட்டுப் பறந்து அடியார்களுக்குத் தரிசனம் தந்த தெய்வீகக் காட்சி, பக்தர்களின் பக்திப் பெருக்கை உச்சிமுடிக்குக் கொண்டு சென்றது.
அதனைத் தொடர்ந்து, ஆலயப் பிரதம குருக்கள் சிவஸ்ரீ அ. புவிதர்ஷன் குருக்கள் தலைமையில், எம்பெருமானுக்கு மகா அபிஷேக ஆராதனைகள் தொடங்கின. பக்தர்கள் தங்களின் கைகளால் சுமந்து வந்த அந்தப் புனிதமான பால்குடங்களின் பால், ஈசனின் திருமேனியில் குளிர்ச்சியாகப் பொழிந்தபோது, ஒட்டுமொத்த ஆலய வளாகமும் ஆன்மீகப் பேரொளியில் மூழ்கியது.
எம்பெருமானின் திருவுருவம் பாலாபிஷேகத்தில் நனைந்து, நின்ற கோலத்தில் பேரருள் பாலித்த அந்தப் தெய்வீகக் காட்சியைக் கண்ட பக்தர்கள், கைகளைக் கூப்பி, கண்கள் பனிக்க, பக்திப் பெருக்கில் உறைந்து உருகி நின்றனர்.
மகா பாலாபிஷேகத்தைத் தொடர்ந்து, மதிய வேளையில் எம்பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகளுடன் கூடிய மங்கல 'மகேஸ்வர பூஜை' பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது. ஈசனின் பேரருள் பொங்கும் மகா தீபாராதனைக்குப் பிறகு, ஆலயத்திற்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தப் பெருமக்களுக்கு மகா அன்னதானம் செம்மையான முறையில் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு மலேசிய இந்து சங்கத்தின் நெகிரி செம்பிலான் மாநிலப் பேரவைத் தலைவர் சங்கபூஷண் சிவஸ்ரீ டாக்டர் ஏ.எல். ஆனந்த் கோபி சிவாச்சாரியார் உட்பட பல சமயப் பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இன்று மாலை 6.31 மணி அளவில், பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் ஆடியசைந்து வரவிருக்கும் பிரம்மாண்ட 'சப்த இரத ஊர்வலம்' கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட இந்த ஏழு திருத்தேர்களில் எம்பெருமானும் தெய்வங்களும் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கவுள்ளனர்.
பக்திப் பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ள இந்தச் சப்த இரத ஊர்வல நிகழ்விற்கு, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் அறங்காவலரும், மஹிமா அமைப்பின் தலைவருமான டத்தோ என். சிவகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து சிறப்பிக்கவிருக்கிறார் எனத் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.















