ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் புளூபிரிண்ட் செயல்திட்ட அறிக்கை மலேசிய அரசாங்கத்தின் ஆவணமாகும் என்றும், அதனைத் தொடங்குவதற்குச் சிங்கப்பூரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் ஓன் ஹஃபீஸ் காசி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் அரசாங்கத்துடன் தேவையான ஆலோசனைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதாகவும், இனி புத்ராஜெயா இதனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவது மட்டுமே பாக்கி என்றும் ஜோகூர் மந்திரி பெசார் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டுப் பிரதமர்களும் நேரில் சந்தித்து இந்தத் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறுவது தவறான தகவல், அது மக்களைத் தவறாக வழிநடத்தும் என்று ஓன் ஹஃபிஸ் காசி தனது அறிக்கையில் கடுமையாக சாடியுள்ளார்.
ஜேஎஸ்-எஸ்இஇசட் செயல்திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக ஓன் ஹஃபீஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த ஆண்டின் நான்காம் காலாண்டிற்குள் இது தொடங்கப்படும் என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நசீர் விளக்கமளித்துள்ளார். இதற்கிடையே, வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான பிரச்சாரப் பொருளாக இந்த விவகாரத்தை ஓன் ஹஃபீஸ் பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது அல்ல என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.








