பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா ஹாஜி ராம்லி ஙா தாலிப் அவர்களின் 85-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் நீண்ட காலம் அரும்பணியாற்றிய சேவைப் பிரமுகர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாநில அளவில் நடைபெற்ற இந்த சிறப்பு விழாவில், வர்த்தகத் துறையில் நீண்ட காலம் பங்காற்றி வரும் முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள், பல்வேறு வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சமூக இயக்கங்களின் பொறுப்பாளர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோ, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், பொது இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கும் நன்னாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் பல்வேறு வழிகளில் தன்னலமற்ற சேவையாற்றியை வழங்கி அன்பர்களுக்கு பினாங்கு ஆளுநரின் மூலம் பல்வேறு உயரிய விருதுகள் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று விருதளிப்பு விழாவில் கலந்து கொண்ட பினாங்கு லீகா முஸ்லீம் அமைப்பின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹாஜி ஹாஜா நஜ்முதீன் காதர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

முஸ்லிம் நகை வியாபாரிகள் மற்றும் பணமாற்றுவோர் சங்கத்தின் தலைவரும், மலேசிய பனைக்குலம் சங்கத்தின் தலைவருமான டத்தோ டாக்டர் ஹாஜி அன்வர் உசேன் பின் ஹாஜி ரஹ்மத்துல்லா அவர்களுக்கு டி.எம்.பி.என் எனப்படும் தர்ஜா யாங் முலியா பாங்குவான் நெகிரி என்ற உயரிய அந்தஸ்தை தாங்கிய டத்தோ’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் மேன்மைக்கும், பினாங்கு மாநிலத்திற்கும் டத்தோ டாக்டர் ஹாஜி அன்வர் உசேன் ஆற்றி வரும் அளப்பரிய சேவையை முன்னிட்டு, ஆளுநர் அவர்கள் அவருக்கு உயரிய விருதை வழங்கி கெளரவித்துள்ளார்.


சமூகப் பிரமுகரும், தன்னலமற்ற சேவையாருமான டத்தோ ஹாஜி முனோவர் சாதிக் எம்.கே.இ. காதர் சுல்தான் அவர்களுக்கு டி.எஸ்.பி.என் எனப்படும் தர்ஜா செத்தியா பாங்குவான் நெகிரி என்ற அந்தஸ்தை தாங்கிய டத்தோ விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

பினாங்கு ஆளுநரிடம் உயரிய விருதுகளைப் பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் 'திசைகள்' தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. உங்களின் மக்கள் நலச்சேவைகளும் சாதனைகளும் மென்மேலும் சிறந்து விளங்க எங்களது வாழ்த்துகள்!








