பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் ஆசிரியர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மிகக் கடுமையாக்கியுள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சர் பத்லினா சிடேக் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், பாலியல் குற்றச்சாட்டில் சந்தேகிக்கப்படும் அல்லது குற்றம் சாட்டப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பள்ளியில் இருந்து மாற்றப்பட்டு, கல்வி அமைச்சின் மனிதவள மேலாண்மை பிரிவின் கீழ் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புகார் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே பள்ளிச் சூழலில் இருந்து முழுமையாக அகற்றப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் காலத்திலேயே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணியில் இருந்து விரைவாக நீக்கும் நடைமுறைகளையும் கல்வி அமைச்சு எளிமைப்படுத்தியுள்ளதாக பத்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், விசாரணை முடியும் வரை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்கள் பள்ளிச் சூழலில் இருந்து உடனடியாக விலக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.








