பெட்டாலிங் ஜெயா, ஜூலை.17-
சிலாங்கூர் மாநிலம் Sungai Besar அருகே உள்ள Kampung Tebuk Marso பிரதான சாலையில் இன்று அதிகாலை இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 21 வயதுடைய லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். அவரது 7 மாத கர்ப்பிணி மனைவி லேசான காயமடைந்தார்.
இது குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் Ashrul Riezal Asbar கூறுகையில், அதிகாலை 2.49 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சுங்கை பெசார் நிலையத்திலிருந்து ஆறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
36 டன் இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரியும், கண்டெய்னர் ஏற்றிச் சென்ற மற்றொரு லாரியும் மோதியதில், 26 வயதான கர்ப்பிணி பெண் பொதுமக்களால் மீட்கப்பட்டார்.
ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த அவரது கணவர் பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.








