Dec 6, 2025
Thisaigal NewsYouTube
மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: ஆடியோ பதிவு, புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: ஆடியோ பதிவு, புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.06-

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய ஆதாரமான ஆடியோ பதிவை, சம்பந்தப்பட்ட மூன்று குடும்பத்தினர் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் ஒப்படைத்தனர்.

அந்த மூன்று பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, கடைசி 13 நிமிடத்தில் என்ன நடந்தது என்பதற்கு முக்கிய ஆதாரமான ஆடியோ பதிவு, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றச்சாட்டு மற்றும் சட்டப் பிரிவின் டி நைன் ( D 9 ) பிரிவின் தலைவர் சுப்ரிண்டெண்டன் தா கா லூனிடம் ஒப்படைத்தனர்.

13 நிமிடம் ஓடக்கூடிய அந்த ஆடியோப் பதிவில் அந்த மூவரும் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்த போலீஸ்காரர்களின் உரையாடல், சுட்டுக் கொல்லப்பட்டவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் ஆகியவை இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினருடன் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வந்திருந்த, மனித உரிமை இயக்கத்தின் பொறுப்பாளரான வழக்கறிஞர் சுரேந்திரன் கூறுகையில், இந்த ஆதாரத்தை ஒப்படைத்தால் மட்டுமே போலீசார் இவ்விவகாரம் குறித்து விசாரணை செய்ய முடியும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த மூன்று குடும்பத்தினரும் ஆடியோ பதிவை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர் என்றார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில் போலீசாரின் கடப்பாட்டை கேள்வி எழுப்பிய சுரேந்திரன், முக்கியமான ஆதாரம், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் இருக்கும் பட்சத்தில், இந்த முக்கியமான ஆதாரம் இல்லாமல் போலீசார் எவ்வாறு விசாரணையைத் தொடங்கியிருக்க முடியும் என்று வினவினார்.

Related News