Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்: பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்: பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

கோலாலம்பூர், ஜூன்.14-

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள முன்னணி உணவகம் ஒன்றில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதில் சரமாரியாகச் சுடப்பட்ட உள்ளூரைச் சேர்ந்த நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார். அந்த நபருடன் உணவகத்தில் உணவருந்திக் கொண்டு இருந்த அவரின் இரு நண்பர்களுக்கும் துப்பாக்கிச்சூடு பாய்ந்தது. கடும் காயங்களுக்கு ஆளான அந்த இரு நபர்கள், மலாயா பல்லைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 10.50 மணியளவில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட நபரும், அவரின் இரு நண்பர்களும் அந்த முன்னணி உணவகத்தில் உணவருந்திக் கொண்டு இருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து தாங்கள் புலனாய்வு செய்து வருவதாக ஏசிபி கூ மாஷாரிமான் குறிப்பிட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் உடல், மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

அந்த உணவகத்தில் நடந்த இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →