ஜோகூரில் மலிவு விலை வீடுகள் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வீட்டுவசதி தேவைகளுக்கு மாநில அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், ஜோகூர் பாருவில் வீடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், இளைஞர்கள் மற்றும் புதிதாக குடும்பம் தொடங்குபவர்களுக்கு சொந்த வீடு வாங்குவது மிகவும் சிரமமாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, நேற்று மூவாரில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்வார், ஜோகூர் மாநில அரசாங்கத்தில் மாற்றம் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறைந்த வருமானம் கொண்ட மக்களின் தேவைகளில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் விவரித்துள்ளார்.
அதற்கு, கூட்டரசு அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயல்படும் மாநில அரசாங்கம் அமைந்தால் மட்டுமே, இது போன்ற வளர்ச்சிப் பணிகளில் தாமதம் ஏற்படாது என்பதையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.








