லபுவான், ஜூலை.05-
நாட்டில் போதைப்பொருள் மற்றும் போதைப்பழக்கத்தில் சிக்கியவர்களில், எஸ்பிஎம் உள்ளிட்ட இடைநிலைக் கல்வி முடித்த பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 68 ஆயிரத்து 619 பேர் இருப்பதாக, தேசிய போதைப் பொருள் தடுப்பு முகமையான ஏஏடிகே அறிவித்துள்ளது.
இது குறித்து ஏஏடிகே தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டு புள்ளி விவரங்களின் படி, பள்ளிப் பருவம் மற்றும் இளமைக் காலமே போதைப்பொருள் தடுப்புக்கு மிகவும் முக்கியமான கட்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, லபுவான், கம்போங் பெலுகுட் பகுதியில், நடைபெற்ற போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வுப் பயணம் மற்றும் போதைப்பொருள் இல்லாத லட்சியக் கிராமத் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 15 முதல் 39 வயதுக்குட்பட்ட 48 ஆயிரத்து 042 பேர் போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கியிருப்பது மிகவும் கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய பொற்காலத்தில் இளைஞர்கள் போதைப்பொருளால் தங்கள் எதிர்காலத்தை இழந்து வருவதாகவும் அவர் மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, நாட்டில் 1 லட்சத்து 882 பேர் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் என பதிவுகள் காட்டுவதாக ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.
இது மக்கள் தொகையில் ஒவ்வொரு 1 லட்சம் பேருக்கும் 295 பேர் என்ற விகிதத்திற்குச் சமமாகும்.
மேலும், ஷாபு, பில் கூடா போன்ற Amphetamine வகை ஊக்கிகளாலான செயற்கை போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது என்றும், நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் போதைப்பொருள்களில் 73 சதவீதம் இந்த வகை செயற்கை போதைப்பொருள்களே என்றும் ருஸ்லின் ஜுசோ கவலை தெரிவித்துள்ளார்.








