கோலாலம்பூர், ஜூலை.05-
நாடு முழுவதும் பிக்கப் மற்றும் ஜீப் வகை டீசல் வாகன உரிமையாளர்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு, பூடி டீசல் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் கூடுதலாக 100 லிட்டர் மானிய டீசல் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பயனாளிகளுக்கான மாதாந்திர மானிய டீசல் ஒதுக்கீடு 200 லிட்டரிலிருந்து 300 லிட்டராக இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மானிய விலையின் மூலம், தீபகற்ப மலேசியாவில் 1.74 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், சபா, சரவாக் மற்றும் லபுவானில் 22 ஆயிரத்திற்கும் அதிகமானோரும் பயனடைகின்றனர்.
பிக்கப் மற்றும் ஜீப் வாகனங்களின் அதிக டீசல் பயன்பாடு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் கிராமப்புற, தொலைதூர பகுதிகளுக்கான பயணத் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இரண்டாவது நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான், இந்த கூடுதல் மானிய டீசல் ஒதுக்கீடு, பிக்கப் மற்றும் ஜீப் வாகன உரிமையாளர்கள் தங்களின் மாதாந்திர டீசல் தேவையை சிறப்பாக நிர்வகிக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
கோத்தா கினபாலுவில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், பூடி டீசல் திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிக்கப் மற்றும் ஜீப் வகை டீசல் வாகனங்கள் அன்றாடப் பயணத்திற்காக மட்டுமல்ல; வாழ்வாதாரம் ஈட்டவும், குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அரசாங்கம் நன்கு புரிந்து கொண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.








