மூவார், ஜூலை.05-
மலேசியா சிங்கப்பூர் எல்லைச் சாவடிகளில் ஏற்படும் நெரிசலை முழுமையாகக் குறைக்கும் நோக்கில், புதிய டிஜிட்டல் குடிநுழைவு முறை மற்றும் கூடுதல் சோதனைப் பாதைகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்த இரு நாடுகளும் இலக்காகக் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
Temu Anwar Johor Ke Depan என்ற ஜோகூர் மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய அன்வார், அனைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்ததும், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் - உடன் இணைந்து இத்திட்டத்தை ஜனவரியில் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தேர்தல் வாக்குறுதி அல்ல என்றும், தேர்தல் பிரசார காலத்தில் புதிய வாக்குறுதிகளை அறிவிப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்த புதிய டிஜிட்டல் குடிநுழைவு முறை மூலம் எல்லை கடக்கும் நடைமுறை மேலும் விரைவாகவும் எளிதாகவும் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்துறை அமைச்சின் கீழ் செயல்படும் குடிநுழைவுத் துறையானது, நாட்டின் நுழைவு சாவடிகளில் பயணிகள் சோதனையை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய டிஜிட்டல் முறைமை செயல்பாட்டுக்கு வந்ததும், சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்கு பயணிப்பவர்களுக்கான புதிய பயண நடைமுறைகளும் அமல்படுத்தப்படும் என்றும் அவர் விவரித்துள்ளார்.
அதேவேளையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பை விட தற்போது எல்லைச் சாவடிகளின் செயல்திறன் மேம்பட்டிருந்தாலும் கூட, குடிநுழைவு நடைமுறைகளை இன்னும் சிறப்பாக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.








