சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ள தகுதியான குடும்பங்களுக்கு கூடுதலாக 2,500 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த நிதியுதவியானது இன்று முதல் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கெனவே வழங்கப்படும் 1,000 ரிங்கிட் பந்துவான் வாங் இஹ்சான் உதவியுடன் கூடுதலாக இந்தத் தொகையானது வழங்கப்படவுள்ளது.
மேலும், வெள்ளத்தால் வீடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக சேதம் ஏற்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்படும் என அன்வார் தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை, ஜெராம் பகுதியில் உள்ள எஸ்கே பாரிட் மஹாங் நிவாரண மையத்தில் தங்கியுள்ள 36 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேரைச் சந்தித்த அவர், மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.








