May 22, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பின் வீட்டுக்காவல் உத்தரவு தொடர்பான விசாரணையில் தெங்கு ஜஃப்ருலின் மனு, மே 2 ஆம் தேதி செவிமடுக்கப்படவுள்ளது
தற்போதைய செய்திகள்

நஜீப்பின் வீட்டுக்காவல் உத்தரவு தொடர்பான விசாரணையில் தெங்கு ஜஃப்ருலின் மனு, மே 2 ஆம் தேதி செவிமடுக்கப்படவுள்ளது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 30-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கூடுதல் உத்தரவு தொடர்பில், இடைத்தரப்பாக தம்மைச் சேர்த்துக்கொள்வதற்கு, முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர்தெங்கு டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் செய்திருக்கும் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மே 2 ஆம் தேதி செவிமடுக்கவுள்ளது.

நஜிப் ரசாக்கின் சட்டநடவடிக்கைக்கு ஆதரவாக, துணைப்பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமது ஜாஹித் ஹமிட், இதற்கு முன்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த AFFIDAVIT மனுவில் தவறு இருப்பதாகவும் அதனைத் திருத்திக்கொள்ள, தம்மை இடைத்தரப்பாக சேர்த்துக்கொள்ள அனுமதியளிக்கும்படியும் கூறி, தெங்கு ஜஃப்ருல் அந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

வருகின்ற வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் நீதிபதி டத்தோ அமர்ஜித் சிங் அந்த மனுவை செவிமடுக்கவுள்ளதை, தெங்கு ஜஃப்ருல்-லின் வழக்கறிஞர் முஹம்மது ஃபர்ஹான் முஹம்மது ஷஃபீ, மலேசியா கினியிடம் உறுதிபடுத்தினார்.

முன்னதாக, நஜிப் ரசாக்கை வீட்டு சிறையில் வைப்பதற்கு முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவை வழங்கியதாகவும் அதனை அரசாங்கம் மறைத்திருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மது ஷஃபீ அப்துல்லா குற்றம் சாட்டியிருந்தார்.

அப்படியொரு உத்தரவை முன்னாள் பேரரசர் பிறப்பித்தாரா என்பதை கண்டறிய நீதித்துறை சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்த நஜிப் ரசாக், உள்துறை அமைச்சர், சட்டத்துறை தலைவர், பொதுமன்னிப்பு வாரியம், கூட்டுரசு அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அதனை உறுதிபடுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News