கிள்ளான், மே 29-
கிள்ளான், காப்பார், கோலசிலாங்கூர் உட்பட சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் உட்பட கடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 20 இந்திய நபர்கள், கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
26 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 20 இந்திய நபர்களும் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான கடும் பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் ( SOSMA ) கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
TR குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 39 வயது N. நித்தியன், 32 வயது S. லோகன், 32 வயது R. பார்த்தீபன், 30 வயது M. கேசவநாயர், 40 வயது A. பாலமுருகன், 46 வயது VS Wilbert, 45 வயது M. ராமகிருஷ்ணன், 34 வயது E. மோகன், 44 வயது ஆ. தனசேகரன், 49 வயது எட்வர்ட் லியூவ், 28 வயது S. மனோராஜ், 30 வயது M. அமரன், 31 வயது S. ஹேமநாதன், 38 வயது K. தனசீலன், 43 வயது K. ரவிசங்கர், ஓர் இந்திய முஸ்லிம் நபரான 51 வயது முஹம்மது ராஸி அப்துல்லா, 29 வயது G. டினேஷ்குமார், 32 வயது K. விநாயகராஜ், 26 வயது A. கோகிலன் மற்றும் 26 வயது M. தினேஷ்குமார் ஆகியோரே கடும் சட்டமான சொஸ்மாவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
ஜாலான் கிள்ளான் - கோலா சிலாங்கூர் சாலையில் காப்பார் அருகில் 16 ஆவது மைல், ஜெராம், சுங்காய் ஜங்குட் கடற்கரை அருகில் உள்ள ஓர் உணவகத்தை தளமாக கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு மே 2 ஆம் தேதி வரையில் இந்த TR குண்டல் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஹ்மத் பைசாத் யாஹ்யா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட இந்த 20 பேரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த 20 பேருக்கு எதிரான வழக்கு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்களிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 130 V பிரிவின் கீழ் இந்த இருபது பேரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இன்று காலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், இந்த 20 பேரும் சங்கிலி மூலம் விலங்கிடப்பட்டு, போலீஸ் லோரியில் கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, மக்கள் மத்தியில் பெரும் கவன ஈர்ப்பாக மாறியது.
இவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை ஜுன் மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








