கோலாலம்பூர், டிசம்பர்.06-
மலாக்காவில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ஒருவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து புலன் விசாரணை செய்யப்படுகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.16 மணியளவில் போலீசில் புகார் செய்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாம்சுடின் மாமாட் தெரிவித்தார்.
அந்த வழக்கறிஞர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டலுக்கான ஓர் உள்ளடக்கத்தை சமூக ஊடகத்தில் அனுப்பியுள்ளதாக தமது புகாரில் தெரிவித்துள்ளார் என்று ஏசிபி ஷாம்சுடின் குறிப்பிட்டார்.








