- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம்
துணைப்பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட யயாசன் அகால்புடி அறவாரியம் தொடர்புடைய 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான வழக்கில், அவரை விடுதலை செய்து இருக்கும் நீதிமன்ற முடிவில் தாம் சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
இது முழுக்க - முழுக்க சட்டத்துறை தலைவரின் முடிவாகும். இதில் தாம் சம்பந்தப்படவில்லை என்று இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மலேசிய செய்தியாளர்களிடம் பிரதமர் இந்த விளக்கத்தை தந்துள்ளார்.
லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி, வழக்கிலிருந்து விடுவிக்கப்படாமல் அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டது, மேல் இடத்து முடிவா? என்று வினவியுள்ள பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், குற்றச்சாட்டுகளை அகற்றுவதற்கு சட்டத்துறை தலைவர் அலுவலகம் எடுத்துள்ள முடிவிற்கு பிரதமர் அன்வாரே பொறுப்பேற்க வேண்டும் என்று நேற்று அறைகூவல் விடுத்து இருந்தார்.
முகைதீனின் இந்த கோரிக்கைக்கு எதிர்வினையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பேற்றது முதல் நீதிபரிபாலனம் தொடர்புடைய நடவடிக்கைகளில் தாம் தலையிட்டது கிடையாது என்று விளக்கம் தந்துள்ளார்.








