வணிகர்கள் பொருட்களுக்கான விலைப்பட்டியலை வைப்பதைக் கட்டாயமாக்கும் சட்ட விதிமுறைகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சு இந்தச் சட்டத்தை கண்டிப்பான முறையில் அமல்படுத்துவதற்கு தீவிரம் காட்ட வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் கேட்டுக்கொண்டார்.
அங்காடி உணவுக்கடைகள், காய்கறி, மீன், கோழி சந்தைகள், பசார் மலாம், உணவகங்கள், மளிகைக்கடைகள் ஆகியவற்றின் மீது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் வியாபாரிகள் பலர், பொருட்களின் விலையை கண்மூடித்தனமாக உயர்த்தி இருப்பதை அறிய முடிந்தது என்று முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.








