Jul 18, 2026
Thisaigal NewsYouTube
குறிப்பிட்ட காலவரம்பற்ற சிறார் சிறைத்தண்டனை விதி மறுஆய்வு: குலசேகரன் தகவல்!
தற்போதைய செய்திகள்

குறிப்பிட்ட காலவரம்பற்ற சிறார் சிறைத்தண்டனை விதி மறுஆய்வு: குலசேகரன் தகவல்!

Share:

மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்காகக் தண்டிக்கப்படும் சிறார்கள், குறிப்பிட்ட சிறைக்காலம் இல்லாமல் தடுத்து வைக்கப்படுவதை அனுமதிக்கும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் விதியை ஒரு சிறப்புக் குழு மறுஆய்வு செய்து வருவதாகச் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தத் துறை துணை அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்டப்பிரிவு 97-இன் கீழ், இத்தகைய சிறார்களுக்கு நீதிமன்றங்கள் 10 அல்லது 20 ஆண்டுகள் எனத் திட்டவட்டமான சிறைத்தண்டனையை விதிப்பதில்லை என்றும், மாறாக அவர்கள் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்லது மாநில ஆளுநர்களின் விருப்பப்படி காலவரம்பின்றி தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

இதன் காரணமாக, தெளிவான தடுப்புக்காவல் காலத்தை அறிமுகப்படுத்துதல், வருடாந்திர மறுஆய்வுகள் மற்றும் சிறார்களின் மறுவாழ்வு மற்றும் சமூக மறுஇணைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. தற்போது இச்சட்டப்பிரிவின் கீழ் மலேசியாவில் 40 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூன்று பேர் 20 முதல் 25 ஆண்டுகள் வரை சிறையில் உள்ளனர் என்றும் குறிப்பிட்ட அவர் , இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட 25 நாடுகளின் சிறார் நீதித் தரமுறைகளை ஒப்பிட்டு இந்த மறுஆய்வு மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, பொதுப் பாதுகாப்பு மற்றும் சிறார்களின் மறுவாழ்வு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேணுவதே இதில் உள்ள முக்கிய சவாலாகும் என்றும் குலசேகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related News