நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக என்யுதிபி எனப்படும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்படவில்லை என்றால் நாட்டின் கல்வித் தரம் பாதிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக அது கோடி காட்டியுள்ளது.
பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்களின் காலி இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படாமல் இருப்பதே ஆசிரியர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும் என்று தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் தலைவர் அமினுடின் அவாங் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் குறைந்த பட்சம் ஓர் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னையை ஒவ்வொரு பள்ளியும் எதிர்நோக்கி வருவது தற்போது புதிய போக்காக மாறியுள்ளது.
காலி இடங்கள் உடனடியாக நிரப்பப்படாததால், ஆசிரியர்களின் பணிச்சுமை இரட்டிப்பாக உயர்ந்து இருப்பதாகவும் அமினுடின் அவாங் விளக்கினார். 







