தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பத்துகேவ்ஸ் சுற்று வட்டாரத்தில் உள்ள 7 பிரதான சாலைகள் நேற்று ஜனவரி 22 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் வரும் ஜனவரி 27 ஆம் தேதி சனிக்கிழமை வரை போக்குவரத்திற்கு மூடப்படும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் அறிவித்துள்ளார்.
பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலய தைப்பூச விழாவில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி ஆலய வளாகம் வீற்றிருக்கும் பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அச்சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று டத்தோ ஹுசெயின் ஓமார் குறிப்பிட்டார்.
பத்துகேவ்ஸிற்கு செல்லும் ஜாலான் புங்ஙா ராயா சாலை சந்திப்பு, பத்துகேவ்ஸ் வளைவு சாலையான MRR2, ஜாலான் லாமா பத்து கேவ்ஸ், ஜாலான் எஸ்பிசி 8 சாலை சந்திப்பு, ஜாலான் ஸ்தெசன் சமிக்ஞை விளக்கு சாலை அல்லது பத்து கேவ்ஸ் பைபாஸ், கோம்பாக்கிலிருந்து பத்துமலை ஆலயத்திற்கு செல்லும் ஜாலான் பெருசாஹான், MRR2 விலிருந்து வெளியேறும் ஶ்ரீ பத்துகேவ்ஸ் சமிக்ஞை விளக்கு சாலை சந்திப்பு ஆகியவை தைப்பூசத்தையொட்டி பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் மூடப்படவிருக்கும் சாலைகளாகும்.
நேற்று பத்துமலையில் போலீஸ் நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசெயின் ஓமார் இதனை தெரிவித்தார். இந்த செய்தியாளர் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ S. சசிகலாதேவியும் கலந்து கொண்டார்.








