மலேசியாவில் தமிழ், சீனப்பள்ளிகளின் தோற்றம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை எதிர்த்து 4 மலாய் அமைப்புகள் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கில அடுத்த மாதம் 23 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ், சீனப்பள்ளிகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கோரி 4 மலாய் அமைப்புகள் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை செவிமடுத்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி சுபாங் லியான், இந்த மேல்முறையீட்டில் தீர்ப்பை வழங்குவதற்கு தமக்கு சற்று கால அவகாசம் தேவை என்றார்.
இந்த வழக்கு விசாரணை பொது நலன் சார்ந்தது என்பதால் இருதரப்பு வழக்கறிஞர்கள் சார்வு செய்த எழுத்துப்பூர்வமான வாதத் தொகுப்பு மற்றும் வாய்மொழியாக வழங்கிய வாதங்கள் ஆகியவற்றை மிக கவனமாக பரிசீலிக்க வேண்டிய கடப்பாடு தங்களுக்கு இருப்பதாக நீதிபதி சுபாங் லியான் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் தாய்மொழிப்பள்ளிகள் சட்டவிரோதமானவை என்றும் அவற்றின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்றும் கூறி, இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம், மலேசிய மலாய் எழுத்தாளர் சங்கம் உட்பட நான்கு அமைப்புகள் அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.








