மலாக்கா, புலாவ் செபாங் –கில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் இளைய மாணவரை மீண்டும் மீண்டும் தாக்கி மிரட்டியதாகக் கூறப்படும் 17 வயது ஐந்தாம் படிவ மாணவர் இரு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை சுமார் 10 மணியளவில், இடைவேளையின்போது பாதிக்கப்பட்ட மாணவர் வகுப்பறையின் வெள்ளைப் பலகையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்ட் அகமத் அபூ பக்கர் தெரிவித்தார்.
முன்னதாக இருவருக்கும் இடையே புலனம் மூலம் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் பாதிக்கப்பட்ட மாணவர் சந்தேக நபரை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த மாணவரை நேரில் எதிர்கொண்ட சந்தேக நபர், அவரை சரமாரியாக குத்தியதுடன், முகம், தலை, வயிறு மற்றும் அந்தரங்கப் பகுதிகளிலும் உதைத்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதலை நிறுத்துவதற்காக பாதிக்கப்பட்ட மாணவர் மன்னிப்புக் கேட்டபோதும், தாக்குதல் தொடர்ந்ததுடன், மீண்டும் தாக்குவேன் எனவும் மிரட்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அகமத் அபூ பக்கர் தெரிவித்தார்.








