மலாக்கா மாநிலத் தேர்தலில் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்க, மலாக்கா முதலமைச்சர் , டத்தோ ஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோப-பை சந்திப்பதற்கான வாய்ப்பை பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுசியோன் இஸ்மாயில்நிராகரிக்கவில்லை.
அப்துல் ரவூஃப் நியூசிலாந்துக்கான அதிகாரப்பூர்வப் பயணத்தை முடித்து நாடு திரும்பிய பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக சைஃபுதீன் தெரிவித்தார்.
மலாக்கா தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் ஒத்துழைப்பு மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மலாக்கா மாநிலத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தங்களது கூட்டணி தயாராக இருப்பதாக பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி அண்மையில் தெரிவித்திருந்தார்.
வெற்றி பெற்ற தொகுதிகளை சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து எளிதில் பறித்து கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கக் கூடாது என்பதே பேச்சுவார்த்தையின் அடிப்படைக் கொள்கை என்றும் ஜாஹிட் கூறியிருந்தார்.
இதனை வரவேற்ற பக்காத்தான் ஹராப்பான் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், மலாக்காவின் எதிர்காலம் மற்றும் அரசியல் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு இந்தத் திறந்த மனப்பான்மை அணுகுமுறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார்.








