சபாவில் உள்ள நான்கு குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5,000-க்கும் அதிகமான ஆவணமற்ற பிலிப்பைன்ஸ் குடியேறிகளை விரைவாக நாடு திருப்பி அனுப்புவது குறித்து மலேசியாவும் பிலிப்பைன்ஸும் இன்று பேச்சுவார்த்தை நடத்தின.
வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தலைமையிலான குழு நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையில், பிலிப்பைன்ஸ் தூதரகம் மேற்கொண்ட ஆவணச் சரிபார்ப்பில் 1,000-க்கும் அதிகமானோர் உடனடியாக நாடு திரும்பத் தயாராக இருப்பது தெரியவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பு முகாம்கள் ஏற்கனவே நிரம்பி வழிவதால், பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தனது குடிமக்களை விரைவாக அழைத்துச் செல்ல வேண்டும் என முகமட் ஹசான் வலியுறுத்தினார்.
மேலும், சபாவில் உள்ள ஆவணமற்ற குடியேறிகளின் குழந்தைகளுக்கான கல்வி வசதிகள் குறித்தும் இரு நாடுகளும் விவாதித்தன. நாடு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு அவர்களின் கல்வித் தேவைகளை மலேசியா ஆராயும் என்றும் அவர் கூறினார்.








