பத்து பூத்தே தீவு மீதான அரச விசாரணை ஆணையத்தில் தனக்கும் தனது வழக்கறிஞர்களுக்கும் சட்டப் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தாக்கல் செய்த மேல்முறையீட்டை அப்பீல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கில் அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையை புதிய ஆதாரமாக சேர்க்க விரும்புவதாக துன் மகாதீரின் வழக்கறிஞர்கள் ஜைனூர் ஜகாரியா மற்றும் ராஃபிக் ரஷீத் அலீ நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி அஜீசுல் அஜ்மீ அத்னான் தலைமையிலான மூவர் கொண்ட நீதிபதிகள் குழு, விசாரணை தேதிகளை நிர்ணயிப்பதற்கு ஏதுவாக வழக்கை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அரச விசாரணை ஆணையத்தில் தன்னையும் தனது வழக்கறிஞர்களையும் பங்கேற்க அனுமதிக்காதது, 1950ஆம் ஆண்டு அரச விசாரணை ஆணையச் சட்டத்தின் 18ஆவது பிரிவை மீறிய செயல் என துன் மகாதீர் வாதிடுகிறார்.








