பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், அல்மாவில் உள்ள கோயில் ஒன்றின் வளாகத்தில் நடந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் மூன்று ஆடவர்களை கைது செய்துள்ளனர்.
அந்த கோயிலின் திருவிழாவையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 12.05 மணியளவில் பொது மக்கள் திரண்டிருந்த போது இளைஞர்கள் மத்தியில் வாய்ச்சண்டை கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் குத்திக்கொண்டு, நாற்காலிகளை தூக்கி எறிந்து, அடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் 21 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செபெராங் பெராய் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி தான் செங் சான் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட அந்த மூன்று இளைஞர்கள் கோயிலின் அமைதியை பாதுகாக்கும் பணியாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்த கைகலப்பு தொடர்பாக 14 மற்றும் 27 விநாடிகள் ஓடக்கூடிய இரண்டு காணொளிகள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதையும் ஏசிபி தான் சுட்டிக்காட்டினார். விசாரணைக்கு ஏதுவாக கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள், நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இந்த கைகலப்பு, குற்றவியல் சட்டம் 160 ஆவது பிரிவின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி தான் மேலும் விவரித்தார்.








