நாட்டில் மக்களிடையே பிளவுகளுக்கும், பேதங்களுக்கும் தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் காரணம் அல்ல. துன் மகாதீர் போன்ற அரசியல்வாதிகளால் இந்த பிளவுகளும் பேதங்களும் ஏற்பட்டுள்ளன என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரா. ரமணன் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் மக்களிடையே தொடர்ந்து பிளவுகளையும், பேதங்களையும் ஏற்படுத்தக்கூடிய இன துவேஷ தன்மையிலான அறிக்கைகள் வெளியிடுவதை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டத்தோ ரமணன் வலியுறுத்தினார்.
நாட்டின் தேசிய கல்வி முறையில் ஒரு பகுதியாக தமிழ், சீன தாய்மொழிகள் செயல்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் அந்த தாய்மொழிப்பள்ளிகளை மூடும்படி துன் மகாதீர் வலியுறுத்துவது தேச நிந்தனை தன்மையிலானது என்று டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.
அடிக்கடி தம்மைப்பற்றி செய்தி வர வேண்டும், மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்பது துன் மகாதீரின் தற்போதைய தேர்வாகவும், விருப்புரிமையாகவும் இருந்து வருகிறது என்று டத்தோ ரமணன் குற்றஞ்சாட்டினார்.
தாய்மொழிப்பள்ளிகள் இந்நாட்டின் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தினால் பாதுகாக்கப்படுகின்றன. அவை தனியார்ப் பள்ளிகள் போல் அல்ல. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே தோற்றுவிக்கப்பட்டு, இந்த நாட்டு வரலாற்றுடன் இரண்டரறக் கலந்துள்ளன. சீனப்பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மலாய்க்காரர், இந்தியர், பூமிப்புத்ரா பிள்ளைகள் பயில்கின்றனர். நாட்டின் மேம்பாட்டிற்கு தாய்மொழிப்பள்ளிகள் ஆற்றி வருகின்ற பங்களிப்பு அளப்பரியது என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றன.
இது உண்மையா? இல்லையா? என்பதை தம்முடன் நேரில் சென்று பார்ப்பதற்கு துன் மகாதீருக்கு அழைப்பு விடுப்பதாக மித்ரா சிறப்புப்பணிக்குழுவின் தலைவருமான டத்தோ ரமணன் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


